"இயக்குநர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும்! ஊனமுற்றோர் நல வாரியம்"நான் கடவுள் படத்தில் ஊனமுற்றோரை இயக்குநர் பாலா அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர தயாராகி வருகிறது தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்.
தமிழ் இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகத் திகழ்பவர் பாலா. திரைப்படத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே கொடுத்தாலும், நான்குமே தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்லும் விதத்தில் அமைந்தன.
பாலா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் நான் கடவுள். இதில் அகோரிகள், பிச்சைக்காரர்கள், உடன் ஊனமுற்றோர் போன்ற உலகின் ஒதுக்கப்பட்ட மனிதர்களின் உலகைப் படம்பிடித்திருந்தார் பாலா.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கும் இப்போது எதிர்ப்புக் குரல்கள்.
இந்தப் படத்தில் கண் பார்வையற்ற ஒரு பெண்ணை குருடி என விளிப்பது போல காட்சிகள் அமைத்தும், ஊனமுற்றவர்களை கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது போல காட்டியும் அந்த சமூகத்தினரின் மன உறுதியைக் குலைத்துவிட்டாராம் பாலா. இதற்காக பாலா மன்னிப்புக் கேட்க வேண்டும், அத்தகைய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம் என்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரி்யத்தின் உறுப்பினர் என்ஜினீயர் கோபிநாத், ஊனமுற்றோர் சமூக சேவை நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் உடல் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாகவும் கண்பார்வையற்ற பெண்ணை குருடி என விளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய் பேச இயலாதோரை வில்லன் நடிகர் துன்புறுத்தி அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைப்பது போல காட்சிகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூஜாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் அவரே தன் உயிரை எடுப்பதென்பது ஊனமுற்ற சமுதாயத்தினருக்கு தவறான தகவலாகவும், ஒத்து கொள்ள முடியாத ஒன்றாகவும் உள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர் தன்னம்பிக்கையுடன் உழைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் காலத்தில், ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான் கடவுள் படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும். இயக்குனர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment