வில்லு ஒடிந்த சோகம்… விஜய்க்கு வந்த கோபம்!
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கோபம் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சில பத்திரிகையாளர்கள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று.
எதற்காக விஜய்க்குக் கோபம் வரும்?
அது ஒரு பெரிய கதை… சின்னதாகச் சொல்ல முயற்சிக்கிறோம்.
அப்போது குமுதம் வார இதழின் ஆசிரியராக அமரர் சுஜாதா பொறுப்பு வகித்தார்.
விஜய் நடிக்க, அவர் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ‘ரசிகன்’ படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் விமர்சனம் குமுதத்தில் வெளியாகியிருந்தது.
படத்தையும் நாயகனையும் ஒரு காய்ச்சுக் காய்ச்சியிருந்தது குமுதம். சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவே காய்ச்சி விட்டார்கள். எப்படித் தெரியுமா?
“இவரெல்லாம் (விஜய்) ஒரு மூஞ்சி என்று காசு கொடுத்து படம் பார்க்க வேண்டிய தலை எழுத்து தமிழ் ரசிகனுக்கு…!” என்கிற ரீதியில்…
அவ்வளவுதான்… இதழ் வெளியான அடுத்த நாள் ஆட்டோக்களில் தனது தொண்டரடிப் பொடிகளுடன் குமுதம் அலுவலகம் முன்னாள் போய் இறங்கி, புரசைவாக்கமே அதிரும்படி எஸ்ஏசி ‘வூடு கட்ட’… அடுத்த இதழில் இப்படி எழுதியிருந்தது குமுதம்:
“இளைய தளபதி விஜய் ஒரு அழகான நடிகர். இளம் நாயகர்களில் அவரைப் போன்ற அழகும் நடிப்புத் திறமையும் உள்ளவர்கள் அரிது. அவரைப் பற்றி கடந்த இதழ் ரசிகன் விமர்சனத்தில் இடம்பெற்ற கருத்துக்களுக்கு வருந்துகிறோம்…”
இன்னொரு சமயம்…
விஜய்யின் கோபம் ஒரு பிரபல மாலை நாளிதழின் நிருபரையே வேலையை விட்டுத் துரத்தும் அளவுக்குப் போனது.
மாநிலத்தின் நம்பர் ஒன் நாளிதழின் சினிமா நிருபரைக் கூட, அனைத்துப் பத்திரிகையாளரும் கூடிய ஒரு சந்திப்பில் விரல் நீட்டி எச்சரித்து மிரட்டியவர் விஜய். சச்சின் படம் வெளியானபோது, கடுமையான விமர்சனம் செய்த தினமணி போன்ற முதல்நிலை நாளேடுகளின் நிருபர்கள்கூட மிரட்டப்பட்டனர்.
எதற்கு இவ்வளவு பலமான பீடிகை தெரியுமா… கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இதில் நீங்கள் ‘தரிசிப்பது’ சாட்சாத் அதே ‘இளையதளபதி’ விஜய்யைத் தான்!
சமீபத்தில் தனது வில்லு படத்தைத் தூக்கி நிறுத்த விஜய்யும், பிரபு தேவாவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் தியேட்டராக சுற்றுப்பயணம் செய்தார்கள் அல்லவா…
அப்போது நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எடுத்த வீடியோ காட்சி இது. ஒரு நிருபர்,
‘எம்ஜிஆருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்வது ரொம்ப ஓவரா தெரியலையா?’
என்பது போல ஒரு கிண்டலான கேள்வியைக் கேட்டு வைக்க… அதற்கு பதில் சொல்ல முயற்சித்த விஜய், அடக்க முடியாமல் ஆத்திரப்பட்டு, தனது ரசிகர்களைத் திட்டுவது போல, நிருபர்களை மறைமுகமாகத் திட்டும் காட்சி இது.
இத்தனைக்கும் ரசிகர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை. அவர்களின் குரல் கூட கேட்கவில்லை. இதுவரை நடந்துள்ள விஜய் பிரஸ்மீடை அனைத்திலும் பங்கெடுத்துள்ளோம். எதிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. கல்யாண மண்டபத்துக்கு வெளியில் கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க.
விஜய் கோபத்தில் கத்தும்போது பிரபுதேவாவின் முக மாறுதல்களையும் கவனியுங்கள்!
குறிப்பு: விழா மேடைகளில் பரம சாதுவாய் காட்சி தரும் விஜய்யைக் கண்டவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
‘அட என்னய்யா இது… ஒரு மனுசனுக்கு கோபமே வராதா… இல்ல வரக்கூடாதா?’ என்று சிலர் கேட்கக் கூடும்.
எதனால் இந்த நிலை?
எம்ஜிஆர் அல்லது ரஜினி… இப்படி யாராவது ஒரு சூப்பர் ஸ்டாரின் நாற்காலிக்கு குறி வைப்பதால் வந்த அவமானத்தின் விளைவு இது. காதலுக்கு மரியாதை, லவ் டுடே, அட கில்லி வரை தன் பாணியில் தனக்கேற்ற கதைகளில் வெற்றிகளைப் பார்த்தவர்தானே விஜய்… அந்த ட்ராக்கை விட்டுவிட்டு அடுத்தவர் ட்ராக்கில் கண் வைத்தால் இடறத்தானே செய்யும்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment